vrijdag 11 april 2008

ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்-ஐரோப்பாவுக்கு வைகோ கோரிக்கை

ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்-ஐரோப்பாவுக்கு வைகோ கோரிக்கைவெள்ளிக்கிழமை, ஏப்ரல் 11, 2008

ஆஸ்லோ: உலகின் மூத்த இனமான தமிழினத்தை அழிக்காமல் காக்க இலங்கையை ஐரோப்பிய யூனியன் நிர்ப்பந்திக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.நார்வே தலைநகர் ஆஸ்லோ வந்துள்ள வைகோ, அங்கு நடைபெறும் தெற்காசியாவில் மோதல்களும், வன்முறையும் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டார். இந்த கருத்தரங்கத்திற்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை இயக்கம், ஐரோப்பிய யூனியன், ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.இந்த கருத்தரங்கில் வைகோ பேசுகையில், இலங்கையில் தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உலகின் மூத்த இனம் ஒன்று ஒட்டுமொத்தமாக அங்கு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய யூனியன் இனியும் இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் கண்மூடிக் கொண்டு இருக்கக் கூடாது.உடனடியாக தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும், விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும், தமிழினத்தை அழிக்கக் கூடாது என்று இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.இலங்கை இனப் பிரச்சினைக்கு ஆயுதம் மூலம் தீர்வு காண முடியாது. ராணுவத்திற்கு அங்கு வெற்றி கிடைக்காது. தனி நாட்டை மட்டுமே தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் வசித்து வரும் பகுதிகள் பாரம்பரியமாக தமிழர்களின் உணர்வு பதிந்த பூமி. அந்தப் பூமியை விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை.ஆண்டாண்டு காலமாக அரசால் ஒடுக்கப்பட்டதால்தான் பொங்கி எழுந்து ஆயுதப் போராட்டத்தில் அவர்கள் குதித்தனர். அரசுப் படைகளின் தொடர் தாக்குதல்களால் லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் உலகம் முழுவதும் பல நாடுகளில் அகதிகளாக வாழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் துடைக்க ஐரோப்பிய யூனியன் முன்வர வேண்டும் என்றார் வைகோ.நிகழ்ச்சியில் ரவிசங்கர் பேசுகையில், இலங்கையில் தமிழர்கள் படும் துயரத்தை இனியும் உலக சமுதாயம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. குறிப்பாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் கண்மூடிக் கொண்டு இருக்கக் கூடாது.சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை தமிழர்களின் துயர் துடைக்க தீவிரமாக களம் இறக்கப்பட வேண்டும் என்றார்.

Geen opmerkingen: