maandag 14 april 2008

வன்னிக் களமுனை மாறுமா?

வன்னிக் களமுனை மாறுமா? இறுகிப் போயுள்ள வன்னிக் களமுனையில் சடுதியான மாற்றங்கள் ஏற்படப் போவதான அறிகுறிகள் தென்படுகின்றன. அண்மைக் காலமாக விடுதலைப் புலிகளின் தளபதிகள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் ஆற்றிவரும் உரைகள் அதனைக் கோடி காட்டுகின்றன. தாங்கள் களமுனையில் என்ன செய்யப் போகின்றோம் என்பது பற்றி பொதுவாக விடுதலைப் புலிகள் கதைப்பது குறைவு. ஆனால், அண்மைக் காலங்களாக பொறி பறக்கும் மேடைப் பேச்சுக்கள், செவ்விகள் என அடிக்கடி வெளிவரத் தொடங்கியுள்ளன. அதில் போர் தொடர்பான, அடுத்த கட்ட நகர்வு தொடர்பான பல விடயங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. யுத்தத்தில் சோர்வடைந்துள்ள சிங்களப் படையினரின் உளவுரணை மேலும் குலைத்து விடவோ அன்றி தமிழ் மக்களின் மனங்களில் தோன்றியுள்ள சலிப்பு நிலையைப் போக்கடிப்பதற்காகவோ கூறப்படும் கருத்துக்களாக இவற்றை யாரும் வர்ணிக்கலாம். ஆனால், விடுதலைப் புலிகளைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு அண்மைக்காலப் பேச்சுக்களில் விசேடம் இருப்பதை ஊகிப்பதில் சிரமம் இருக்காது. அத்தோடு இந்தப் பேச்சக்களோடு இணைந்ததாகச் சில செயற்பாடுகளும் உள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் மிக முக்கியமானது மடுமாதா சொரூபத்தின் இடமாற்றம். இந்த விவகாரத்தில் விடுதலைப் புலிகளின் தூண்டுதல் எதுவும் இல்லை என்பது வெளிப்படையானது. ஆனால், சொரூபம் அகற்றப் பட்டமையும், அங்கே தஞ்சம் அடைந்திருந்த மக்கள் வெளியேறியமையும் அவர்களுக்கு களத்தில் தமது முழுப் பலத்தையும் பிரயோகிக்கக் கூடிய வாய்ப்பை வழங்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. இதைத் தவிர மட்டக்களப்பு மாவட்டத்திலும் தற்போது விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. அண்மையில் கொக்கட்டிச்சோலை - மணற்பிட்டிப் பகுதியில் வெடித்த கண்ணிவெடி இதற்கு உதாரணம். போதாதற்கு வாகரைப் பிரதேசத்தில் இயந்திரமில்லாத நிலையில் சில படகுகளும் கைப்பற்றப் பட்டுள்ளன. ஆயதங்களும் முpட்கப் பட்டதாகத் தகவல்களும் வெளியாகியிருந்தன. ஏற்கனவே, தென்னிலங்கையில் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் விடுதலைப் புலிகள் அணியை எதுவும் செய்ய முடியாத நிலையிலேயே சிங்கள ஆயுதப் படைகள் உள்ளன. கம்பஹா மாவட்டத்தில் வெடித்த குண்டு அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயைப் பலி கொண்ட அதே வேளை சிங்கள அரசியல் பிரமுகர்களிடையே கிலியை ஏற்படுத்தி அவர்களின் நடமாட்டங்களைக் கட்டுப் படுத்தி உள்ளதுடன் வாய்ச் சவடால்களையும் குறைத்துள்ளது. வன்னியைச் சுற்றி வளைத்து விடுதலைப் புலிகளை முற்றுகைக்குள் வைத்திருப்பதாக மகிந்த கூட்டணி அடிக்கடி தெரிவித்து வரும் நிலையில், அது உண்மையாக இல்லாத போதிலும் கூட அவர்கள் கூறுவதற்காகவாவது ஒரு பாரிய தாக்குதலைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் விடுதலைப் புலிகள் உள்ளனர். இதன் மூலம் அவர்கள் தற்போதுள்ள தற்காப்பு நிலையில் இருந்து விடுபட்டு எதிரியைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளலாம். எதிரி மனச் சோர்வு அடைந்துள்ள இன்றைய வேளையில் பிரதேசங்களை மீட்பதற்கும் கூட வாய்ப்பு இருக்கின்றது. தற்போது எங்கே, எப்போது பெரும் தாக்குதல் ஒன்று நடைபெறப் போகின்றது என்பதே கேள்வி. எதிர்பாராத வேளையில், எதிர்பாராத இடத்தில், சிறந்த திட்டமிடலுடன், உச்ச பலத்தைப் பிரயோகித்துத் தாக்குவதே விடுதலைப் புலிகளின் வழக்கமான உத்தி. அது முகமாலைக் களமுனையா, வவுனியாக் களமுனையா, மன்னார்க் களமுனையா, மணலாறுக் களமுனையா, திருமலையா, மட்டக்களப்பா, அம்பாறையா, கொழும்பா, தென்பகுதி மாவட்டமா அல்லது கடந்த அக்டோபரில் அநுராதபுரம் தாக்கப்பட்டதைப் போன்று எதிர்பாராத ஒரு இலக்கா என்பது அடுத்த ஓரிரு வாரங்களில் தெரிய வரும்

Geen opmerkingen: